Wednesday, December 4, 2019

நமது திருமங்கலத்தில் SKG மருத்துவமனையில்
சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு என்டோஸ்கோப்பிக் சிகிச்சை தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின்
மூலம் செய்யப்படுகிறது.

Tuesday, May 15, 2018

மாரடைப்பு : தடுப்பும் சிகிச்சை முறைகளும்

நேற்று இரவுவரை நம்முடன் நன்றாக உடார்ந்து பேசிச் சென்றவர் இன்று காலையில் இறந்துவிட்டதாக அதிச்சித் தகவல் வருகிறது. என்னாச்சு எனக்கேட்டால்’ அட்டாக்தான்’ என்று பதில் வருகிறது. இந்த ‘அட்டாக்’ எனச் சொல்லக்கூடிய மாரடைப்பு  இன்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பயமும் அச்சமும் நம் அனைவரையுமே ஆட்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. அப்படி அச்சமும் திகிலும் நிறைந்த  மாரடைப்பு வருவதற்கு என்னதான் காரணம்? தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதுபோலத்தன் நமக்கு வரும் நோய்களும். நம்முடைய வாழ்க்கை முறையும் உணவுப் பழக்க வழக்கங்களுமே நமக்கான நோய்களை வரவைக்கிறது.
மது அருந்துதல், புகைப்பிடித்தல், அதிக இறைச்சி உணவுகள், சர்க்கரை நோய், உயர்ந்த ரத்த அழுத்தம்அதிகப்பாடியான  உடல் பருமன் மற்றும்  குறைவான நன்மை செய்யும் கொழுப்பு (HDL) , அளவுக்கு மீறிய கொழுப்பு, உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை, மரபியல் காரணம், அதிக டென்ஷன், கோபம் இப்படி பல காரணங்களை பட்டியலிடுகிறது நம் மருத்துவ உலகம்.
மாரடைப்புக்கான அறிகுறிகள்:
முதலில் மார்பின் நடுப்பகுதியில் வலி தொடங்கும்; அல்லது, இடது பக்கம் வலி ஏற்படும். அந்த வலி, இடது கைக்கும்  பரவலாம். அடுத்து,வயிற்றின் மேல் பகுதியில் ஒரு வித நெஞ்சு எரிச்சல் இருக்கும். திடீரென மூச்சுத் திணறல் ஏற்படும். அருவியாய் வியர்த்துக் கொட்டும். அந்த வியர்வை ஐஸ்போல் ஜில்லென இருக்கும்.
மாரடைப்பைத் தடுப்பது எப்படி?
இவ்வளவு ஆபத்தான் நோயை வராமல் தடுக்க முடியும் என்றால் கட்டாயம் முடியும். அதுவும் நம் கைகளில்தான்இருக்கிறது. புகைப்பழக்கத்தை முழுவதுமாக விடவேண்டும். மது அருந்துவதை தவிர்க்க்க வேண்டும். ரத்த அழுத்தமும் சர்க்கரையின் அளவும் அதிகமாகாமால் பார்த்துக் கொள்ளவேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடவே கூடாது. நல்ல உடற்பயிற்சியும் உடல் உழைப்பும் அவசியம. இவை எல்லாவற்றையும் விட எதற்கெடுத்தாலும் கோபம் டென்ஷன் என்பதை அறவே தவிர்க்க வேண்டும். உடல் எடையை குறைத்தல் அவசியம்.
ஒருவருக்கு மாரடைப்பு காரணமாக  ஏற்பட்டுவிட்டால் அவரை உடனடியாக  எவ்விதக் காலதாமதம் ஏதுமின்றி 3 மணி நேரத்துக்குள் போதிய சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு  அந்நபரைக்  கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் முதலில் அந்நபரை பெரும் பாதிப்பிலிருந்து மீட்டுவிடலாம்.
 சிகிச்சைமுறைகள் :
மாரடைப்பு ஏற்பட்டர்வர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும்போது கீழ்கண்ட மருந்துகளும் சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன.
  • இரத்தம் உறைவதனைக் தவிர்க்கக் கூடியமருந்துகள் வழங்கல்
.(  எ.கா-  அஸ்பிரின் (ASprin), குளோ பிடோகிரல் (Clopidogrel))
  • நெஞ்சுவலியைக் குறைக்கும் மருந்துகள் வழங்கல்.
    எ,கா-– ISMN, GTN
  • இரத்த அழுத்தத்தை சீராக்கும் மருந்துகளும் இருதயத்துடிப்பைக் குறைத்து இருதயத்திற்கான இரத்த வழங்கலை அதிகரிக்கும் மருந்துகளும் வழங்கல்.(எ.கா. – கப்ரோபிரில் (Captopril), அடினலோல் (Atenolel))
  • இரத்தகுழாய்களில் உள்ள இரத்தக் கட்டிகளைக் கரைக்கும் (Thromolyis) மருந்துகளைவழங்கல் .(எ.கா.- – ஸ்ரெப்ரோகைனேஸ்(Streptokainese), நோயாளி ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு எவ்வளவு குறுகியநேர இடைவெளியில் சிகிச்சை பெற வருகின்றாரோ அதைப்பொருத்து இம்மருந்துகள் பயன்படுத்தக் கூடியதாகவும் 12 மணி நேரத்திற்குள் பலனைத் தருவதாகவும் இருக்கும்.
  • ஆரம்ப சிகிச்சையைத் தொடர்ந்து ஆஞ்ஜி யோகி ராம் பரிசோதனையின் பின்னர் அடைப்புகளுள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் ஸ்டெண்ட் வைக்கப்படுதலோ (stent), அல்லது அறுவைச் சிகிச்சையோ (Angioplasty) செய்யப்பட்டு இதயத்தில் ரத்த ஓட்டம் மீண்டும் சரிசெய்யப்படும் இதனால் இருதயத் தசைகளுக்கு ஆக்சிஜன் நிறைந்த  ரத்தம் வழங்கப்படும். இருதயத்தசைகள் இதனால் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதால்  மரணம் தவிர்க்கப்படும்.

சிகிச்சைக்குப்பின் :
மாரடைப்பு சிகிச்சை முடித்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவும் சிகிச்சை முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. இதற்கான சிகிச்சையை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அதேபோல் மீண்டும் ஒரு மாரடைப்பு வருவதை தவிர்க்க முடியும்.
மாரடைப்பு சிக்கிச்சைக்குப்பின்  நெஞ்சில் வலியோ அல்லது வேறு தொந்தரவுகளோ இல்லாத சூழலில், ஒரு வாரத்தில் எளிய உடற்பயிற்சியை ஆரம்பிக்கலாம்.  அது எவ்வாறான உடற்பயிற்சி என்பதை டாக்டரிடம் ஆலோசனை பெற்றே செய்ய வேண்டும்.பெரும்பாலானோருக்கு நடைப் பயிற்சியே எளிதான உடற்பயிற்சியாக இருக்கும். இத்தகைய உடற்பயிற்சியை கொஞ்சம், கொஞ்சமாக அதிகப்படுத்தி, ஒரு சீரான நிலையை அடைவது முக்கியம்.
ஆரம்பத்தில் கால, மாலை என இருவேளைகளும்  10 நிமிடங்கள் நடக்கலாம். பின் நேரத்தையும், வேகத்தையும் இருவாரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து 30 நிமிடங்கள் ஆக்கலாம்.  கனமான பொருட்களை தூக்காமல் இருப்பது நல்லது.இதய வலியோ, மூச்சுத் திணறலோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் நல்ல ஓய்வுக்குப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி 2 மாத காலங்களுக்குபின் இயய்லபான பணிக்கு திரும்புவது நல்லது.
மீண்டும் பணிக்கு திரும்புமுன் மருத்துவரைச் சந்தித்து, ஆலோசனை பெறுவது அவசியம். உடற்பயிற்சியோ, சிறு வேலைகளோ செய்யும் போது, களைப்பாக இருந்தால் சிறிது ஓய்வு எடுப்பது அவசியம். இரவு நேரத்தில் கண்டிப்பாக ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் தேவை. பகல் வேளையில் களைப்பு இருந்தால், ஒரு மணி நேரம் வரை தூங்கலாம்.
மாரடைப்பு வந்துவிட்டதே என்ற சிறிது மனச்சோர்வும் கவலையும் அனைவருக்கும்  ஏற்படுவது இயற்கையே. அவ்வாறு மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபட தினசரி, தவறாமல் சீரான உடற்பயிற்சி மற்றும் மற்ற  வேலைகளில் கவனம் செலுத்தி, மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது நல்லது. மார்டைப்பு வந்துவிட்டதே என்பதையே நினைத்துக் கொண்டிருக்ககூடாது. எந்தச் சூழலிலும் மன அழுத்தம், கவலை போன்றவைகளிலிருந்து உடனடியாக விடுபட வேண்டும். மருத்துவரிடம் தொடர்ந்து ஆலோசனைகளும் சிகிச்சையும் பெறவேண்டும்.
மாரடைப்பை வராமல் தடுப்பதும், வந்தபின் அதிலிருந்து மீள்வதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

நெஞ்சு எரிச்சல்


சாப்பிடும்போது, உணவானது உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. உணவு செரிமானம் அடைய இரைப்பையில் அடர் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்கள் உணவுக் குழாய்க்குள் வருவதைத் தடுக்க உணவுக் குழாயில் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. உணவுக் குழாய் விரிவடையும்போதோ, தடுப்பு வால்வு செயல் இழக்கும்போதோ, அமிலம் கலந்த உணவு, உணவுக் குழாய்க்கு வரும். இதையே ‘நெஞ்சு எரிச்சல்’ என்கிறோம்.
இப்படி எப்போதாவது நிகழ்ந்தால,் பிரச்னை இல்லை. வாரத்துக்கு இரண்டு முறையோ அல்லது அன்றாட வாழ்வையே பாதிக்கும் அளவுக்கோ அமிலம் எதுக்களித்தால், அது ஒரு நோய். உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
அறிகுறிகள்
  நெஞ்சு எரிச்சல்
  சில சமயம் தொண்டை வரை எரிச்சல், கூடவே வாயில் புளிப்பான சுவை
  நெஞ்சு வலி
  விழுங்குவதில் சிரமம்
  வறட்டு இருமல்
  தொண்டைக் கரகரப்பு அல்லது தொண்டையில் புண்
  உணவு அல்லது புளிப்புத் திரவம் எதுக்களிப்பு
  தொண்டையில் கட்டி இருப்பது போன்ற உணர்வு
காரணம்
உணவை விழுங்கும்போது உணவுக் குழாயின் அடிப்பகுதி மற்றும் அதனைச் சுற்றி உள்ள தசைகள் விரிந்து உணவானது இரைப்பைக்குள் செல்ல அனுமதிக்கிறது. உணவு உள்ளே சென்றதும் இது தானாக மூடிக்கொள்கிறது. பின்வரும் காரணங்கள் இந்த அமைப்பைப் பாதிக்கின்றன.
  உடல் பருமன்
  இரைப்பையின் மேல் பகுதியில் வீக்கம்
  புகை பிடித்தல்
  கர்ப்பம்
  உலர் வாய்
  ஆஸ்துமா
  சர்க்கரை நோய்
  திசுக்களில் ஏற்படும் நோய்கள்
  மது அருந்துதல்
தொடர்ந்து அமிலம் வெளியேறும்போது உணவுக் குழாயின் உள் சுவர் பாதித்து, வீக்கம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதில் இருந்து ரத்தக் கசிவு, உணவுக் குழாய் சுருக்கம் ஏற்படலாம்.
தவிர்க்க!
வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
ஆரோக்கியமான உடல் எடைப் பராமரிப்பு: அதிகப்படியான எடை வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை அதிகரிக்கும்.  இந்த அழுத்தத்தின் எதிர்மறையாக, அமிலம் உணவுக் குழாய்க்கு வருகிறது. எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இந்தப் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
இறுக்கமான உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்: இடுப்பில் இறுக்கமாக உடை அணியும்போது அதுவும் அழுத்தத்தை அதிகரிக்கும்.
உணவு: கொழுப்பு நிறைந்த, வறுக்கப்பட்ட உணவுகள் நெஞ்சு எரிச்சலைத் தூண்டுகின்றன. மது, தக்காளி சாஸ், சாக்லெட், பூண்டு, வெங்காயம், காஃபின் பொருட்கள் ஆகியவை நெஞ்சு எரிச்சலைத் தூண்டலாம்.
குறைவாக உட்கொள்ளுதல்: அதிக அளவில் வயிறு புடைக்கச் சாப்பிடுவதற்குப் பதில், சிறிது சிறிதாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தூக்கம்: சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. உணவு உண்ட பிறகு குறைந்தது மூன்று மணி நேரம் கழித்து தூங்கச் செல்ல வேண்டும்.
படுக்கையின் அளவு: படுக்கையின் தலைப்பகுதி சற்று உயர்வாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தலைப்பகுதியை 6 முதல் 9 இன்ச் அளவுக்கு உயர்த்துங்கள். 
சிகரெட்: சிகரெட் புகைப்பது உணவுக் குழாயின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

Sunday, May 13, 2018

நன்றி - டாக்டர் விகடன் 
''எங்கள் மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்-அப்) செய்துகொள்வதற்காக வந்திருந்தார் அவர். கூடவே  கேஷ§வலாக அவருடைய நண்பர் ஒருவரும் வந்து இருந்தார். 'நான் சும்மா... இவனுக்குக் கம்பெனிக்காக’ என்றார். இருவருக்கும் உடல் பரிசோதனை முடிந்தது. சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். பரிசோதனையின் முக்கியத்துவம் தெரிந்து தன் உடம்பில் ஏதேனும் கோளாறு இருக்குமோ என்ற பதைபதைப்பில் வந்தார் இல்லையா, அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கூட சும்மா கம்பெனிக்கு வந்த நண்பருக்கு சர்க்கரை நோயில் தொடங்கி, சிறுநீரகக் கற்கள் வரை அவ்வளவு பாதிப்புகள். இதை நகைச்சுவைக்காக நான் சொல்லவில்லை. நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்பதுதான் ஒவ்வொருவருடைய நம்பிக்கையும். ஆனாலும், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையும் சுற்றுச்சூழல் கேடுகளும் எவரையும் நோயாளியாக்கிவிடும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்'' - 
''நிறைய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், குணப்படுத்திவிட முடியும். ஆனால், நோய் முற்றி சிகிச்சை நிலையை எல்லாம் தாண்டிய கட்டத்தில்தான் இங்கு பெரும்பாலானோர் என்ன நோய் என்றே தெரிந்துகொள்கின்றனர். 20 வயதில் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது. அதன் பிறகு தேவை எனில், டாக்டர் பரிந்துரைக்கும் கால இடைவெளியில் பரிசோதனை செய்யலாம். ஆனால், 40 வயது கடந்தவர்கள் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.
உயர் ரத்த அழுத்தம் என்றால் தலைச் சுற்றல், தலைவலி வரும், டென்ஷன் அதிகரிக்கும் என்று சிலர் நினைப்பார்கள். அதேபோல் சர்க்கரை நோய் என்றால், புண் ஆறாது, பசி இருக்காது, தாகம் இருக்கும் என்றும் பரவலாக ஒரு கருத்து உண்டு. எல்லாம் உண்மைதான். ஆனால், இவை எல்லாம் நோய் முற்றிய நிலையில் தோன்றும் அறிகுறிகள். நோய் தலையெடுக்கும்போதே கண்டறிய முழு உடல் பரிசோதனைதான் சரியான வழி.
உடல் பருமன், குடும்பத்தின் சர்க்கரை நோய் வரலாறு, புகை பிடிப்பது, மது அருந்துவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற ரிஸ்க் ஃபேக்டரை வைத்தே ஒருவருக்கு மாரடைப்பு, சர்க்கரை நோய் வருமா என்பதைக் கண்டறியலாம். அதேபோல், பரிசோதனையில் ஒருவருக்கு சர்க்கரை அளவு நார்மலும் இல்லை, அவருக்கு சர்க்கரை நோயும் இல்லை என்றால், உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமே சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் கொடுத்து மாரடைப்பைத் தடுக்க முடியும். எனவே, 40 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்'' 
''முழு உடல் பரிசோதனை மூலம், இதயம், சிறுநீரகம், கல்லீரல், ரத்தம் ஆகியவற்றில் உண்டாக இருக்கும் நோய்களைப் பற்றி எளிதாக அறிந்துகொள்ளலாம். நோய்க்கான அறிகுறிகள் மற்றும் நோயின் தன்மையையும் அறிந்துகொள்ள முடியும். இதனால் உரிய சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ள முடியும். இங்கே எல்லாவித நோய்களுக்கான சிகிச்சைகளும் உள்ளதால், முழு உடல் பரிசோதனை முடிவுகள் வந்த உடனேயே தேவைப்படும் சிகிச்சையையும் தொடர முடியும்'' என்கிறார் நம்பிக்கையாக.
சரி, முழு உடல் பரிசோதனை என்றால், என்னென்ன பரிசோதனைகள் எல்லாம் செய்வார்கள்?
சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனைக் குழுத் தலைவர் டாக்டர் சிவசிதம்பரம் விளக்குகிறார்.
'பொதுவாக, முழு உடல் பரிசோதனையில் மார்புப் பகுதி எக்ஸ்ரே, ஈசிஜி, சாப்பிடுவதற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு, மொத்த கொழுப்பு அளவு, ரத்தத்தில் ஹீமோகுளோபின், ரத்த அணுக்கள் உள்ளிட்டவற்றின் அளவு, ரத்த அழுத்த பரிசோதனை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகத்தின் செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனத் தொடர் பரிசோதனைகள் நடக்கும். ரத்தசோகை உள்ளதா? அப்படி இருந்தால் எதனால் ரத்தசோகை ஏற்பட்டது என்பதை ரத்தப் பரிசோதனை மூலமே தெரிந்துகொள்ளலாம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் கல்லீரலில் பாதிப்பு உள்ளதா, பித்தப் பை மற்றும் சிறுநீரகத்தில் கல் உள்ளதா, அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். பெண்களுக்குக் கருப்பை மற்றும் கருமுட்டைப் பையில் பிரச்னை உள்ளதா என்று பார்ப்போம். பிரச்னை இருப்பது தெரியவந்தால், அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சைக்குப் பரிந்துரைப்போம்'' என்கிறார் சிவசிதம்பரம்.
முழு உடல் பரிசோதனை வகைகள்
பொதுவாகச் செய்யப்படும் முழு உடல் பரிசோதனையுடன் ஒவ்வோர் உறுப்புக்கு எனப் பிரத்யேகமாகச் சில கூடுதல் பரிசோதனைகளையும் செய்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனைகளைத் தனியாகவோ முழு உடல் பரிசோதனையுடன் இணைந்தோ செய்துகொள்ளலாம். இவை அவரவர் விருப்பத்துக்கு உட்பட்டது. இதன்படி முன்னணி மருத்துவமனைகள் இதயம், நுரையீரல், பக்கவாதம், மூட்டு வலி, கல்லீரல் செயல்பாடு, சிறுநீரகச் செயல்பாடு எனப் பிரத்யேகப் பரிசோதனைகளையும் வழங்குகின்றன. இதற்கான கட்டணம் மருத்துவமனைக்கு மருத்துவமனை மாறுபடும். பொதுவாக அரசு மருத்துவமனையில் ரூ.250-க்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ பரிசோதனை ரூ.800-ல் தொடங்கி சில ஆயிரங்கள் வரை வாங்குகிறார்கள். 
முழு உடல் பரிசோதனை செய்பவர்கள் கவனத்துக்கு:
குடல் மாதிரியான உள்ளே வெற்றிடம்கொண்ட உறுப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை ஸ்கேன் செய்து கண்டறிய முடியாது. அதற்கு என்டோஸ்கோபி போன்ற கருவியை உள்ளே செலுத்தித்தான் பார்க்க முடியும். ஏதேனும் ஒரு நோய் அறிகுறி இருந்தால், சம்பந்தப்பட்ட துறை மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று அதன் பிறகு நோய் கண்டறிதலுக்கு உட்படுவது நல்லது. அதைவிடுத்து, முழு உடல் பரிசோதனை செய்துகொண்டேன். ஆனால், எனக்கு ஒன்றும் இல்லை என்று கூறுவது சரி இல்லை.
முழு உடல் பரிசோதனை செய்ய வருபவர்கள் குறைந்தது ஒரு நாளாவது அதற்கென நேரத்தைச் செலவழிக்க வேண்டும்.
காலையில் சாப்பிடாமல் வர வேண்டும். வேண்டுமானால், தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். சாப்பிடாமல் வர வேண்டும் என்பதற்காக முந்தைய நாள் மதியத்தில் இருந்து சாப்பிடாமல் இருப்பது எல்லாம் கூடாது. குறைந்தது 8 முதல் 10 மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டிருக்க வேண்டும். அப்போதுத£ன் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதைச் சரியாகக் கணக்கிட முடியும். டாக்டர்கள் கேட்கும் கேள்விக்கு மறைக்காமல் பதில் சொல்ல வேண்டும். கையில் இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்து வருவது நல்லது.
திடீர் முடிவாக முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்வது சரியாக இருக்காது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்வது, எப்படி வர வேண்டும் என்று தெரிந்துகொண்டு முழுத் தயார் நிலையில் செல்வதே சிறந்தது.
 பெண்களுக்குப் பிரத்யேகம்
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய மேமோகிராம் பரிசோதனை செய்யப்படும்.
முதியவர்களுக்குப் பிரத்யேகம்
முழு உடல் பரிசோதனையுடன் முதியவர்களுக்கு குடல் புற்றுநோயைக் கண்டறியும் ஸ்டூல் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்படும்.
மூட்டுப் பரிசோதனை
யூரிக் ஆசிட், ரத்த வகை, சீரம் கால்சியம்
பாஸ்பரஸ் பரிசோதனை
மூட்டுப் பகுதியில் எக்ஸ்ரே
எலும்பு மருத்துவர், பிசியோதெரபிஸ்ட் ஆலோசனை
ஆண்களுக்குப் பிரத்யேகம்
ஆண்களுக்கு, விந்துச் சுரப்பியின் செயல்பாட்டைக் கண்டறிய பிரத்யேகப் பரிசோதனை செய்யப்படும்.


நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?
நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.
சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும்.
காரணம் என்ன?
நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. மற்றொன்று, மாரடைப்பு. இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது. இதயத் திசுக்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம். முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும், இந்த நிலைமை ஏற்படுவதுண்டு.
இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது. நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும். ஆனால், உழைப்பு அதிகப்படும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது. இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும். அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.
இதய வலி - அறிகுறிகள்
மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.
மாரடைப்பு - அறிகுறிகள்
சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு (Myocardial infarction).
தூண்டும் சூழல்கள்
இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன. அவை: பரம்பரை, அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலையால் திடீரெனத் தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது ((எ-டு ) மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (( எ-டு ) கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை).
யாருக்கு அதிக வாய்ப்பு?
புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.
நுரையீரல் நோய்கள்
‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக் காற்று நோய் (Pneumo thorax), நுரையீரல் உறை அழற்சி நோய் (Pleurisy), கடுமையான காச நோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும்; பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுவயதினருக்கும் வருகிறது.
நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது சளியில் ரத்தம் கலந்து வரும். இது பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகு வரும். மேற்சொன்ன அறிகுறிகள் மூலம் மாரடைப்பிலிருந்து மற்ற பிரச்சினைகளைப் பிரித்துணரலாம்.
நுரையீரல் ரத்த உறைவுக் கட்டி (Pulmonary embolism) காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். இது பெரும்பாலும் ரத்தக் குழாய் நோயுள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், நீண்டகாலமாகப் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் ஆகியோருக்கு ஏற்படுவதுண்டு.
தசை / எலும்பு வலிகள்
மார்புப் பகுதியில் உள்ள தசை, நரம்பு, எலும்பு மற்றும் எலும்பிடைத் தசைகளில் உண்டாகும் நோய்கள் காரணமாகவும் நெஞ்சில் வலி ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். மார்பில் அடிபடுவது, தசைப் பிசகு, மார்பு / விலா எலும்பு முறிவு போன்றவை இவ்வகை நெஞ்சு வலியை உண்டாக்கும்.
உணவுப்பாதை புண்கள்
தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய் இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். பொதுவாக, இந்த நோயாளியிடம் உணவுக்கும் நெஞ்சு வலிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிய முடியும். இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.
காரணம் என்ன?
நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் இருக்கும் அமிலம் தன் எல்லைக் கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.
மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழைய சல்லடை வலை போல ‘தொள தொள' வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும். இந்த நிலைமையில் உள்ள நெஞ்செரிச்சலுக்குத் தகுந்த சிகிச்சை பெறத் தவறினால், இரைப்பையில் புண் உண்டாகும்.
அப்போது அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரத்திலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. அதுபோல் உணவு சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலிக்கிறது. பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் வரும்.
உளவியல் காரணங்கள்
குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.
பிற நோய்கள்
மகாதமனிக் குழாய் வீக்கம், இதய வெளியுறை அழற்சி நோய், அக்கி அம்மை, அஜீரணம், கணைய நோய், பித்தப்பை நோய், கடுமையான ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம்.
பரிசோதனைகள் என்ன?
வழக்கமான ரத்தப் பரிசோதனை களுடன் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்படும். இவை தவிர, மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., எக்கோ, சி.டி. ஸ்கேன், டிரெட்மில், எண்டாஸ்கோபி போன்ற பரிசோதனைகளும் தேவைப்படும். இவற்றின் மூல காரணம் அறிந்து, சிகிச்சை பெற்றுவிட்டால் நெஞ்சு வலி விடைபெற்றுக்கொள்ளும்.
இதய வலிக்கு முதலுதவி
இதய வலி அல்லது மாரடைப்புக் கான அறிகுறிகள் தெரியவரும்போது உடனடியாக ஆஸ்பிரின் 325 மி.கி., அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி., குளோபிடோகிரில் 150 மி.கி. ஆகியவற்றைச் சாப்பிட்டால், தமனி ரத்தக் குழாயில் ரத்தம் உறைவது தடுக்கப்படும். இதன் பலனாக மாரடைப்பின் தீவிரம் குறைந்து நெஞ்சில் வலி குறையும். இந்த முதலுதவியைத் தொடர்ந்து எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறோமோ அந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்து வருவதைத் தடுக்க முடியும்.
தடுப்புமுறைகள்
புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பான்மசாலாவைப் பயன்படுத்தக் கூடாது.
  • சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.
  • தினமும் முறையாக உடற்பயிற்சி / யோகாசனம் / தியானம் செய்ய வேண்டும்.
  • உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்புக் கோளாறு போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை எடுத்து, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • மாசடைந்த சுற்றுச்சூழலைத் தவிருங்கள். அசுத்தமான காற்றுதான் பல நுரையீரல் நோய்களுக்குக் காரணம்.
  • அசுத்தமான உணவைச் சாப்பிடாதீர்கள்.
  • இரைப்பைப் புண் உள்ளவர்கள், சமச்சீரான உணவை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும். பட்டினி கிடக்கக் கூடாது; விரதம் வேண்டாம்; நேரத்தோடு சாப்பிடும் பழக்கம் முக்கியம்.
  • வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவை அதிகமாக உட்கொள்ளுங்கள். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக இனிப்புப் பண்டங்கள், புளித்த உணவு ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள்.
  • நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கப் போவது நல்லது. படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடிவரை உயர்த்திக்கொள்வது நல்லது.
  • மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய்களுக்குத் தரப்படுகிற ஸ்டீராய்டு மாத்திரைகள், மூட்டுவலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.
  • மன அழுத்தம் தவிருங்கள்.
  • தேவையான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
  • நெஞ்சில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.
கட்டுரையாளர்: பொதுநல மருத்துவர்.

நமது திருமங்கலத்தில் SKG மருத்துவமனையில் சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு என்டோஸ்கோப்பிக் சிகிச்சை தமிழக முதலமைச்சரின் விரிவான ...